Wednesday, 23 April 2008

நாம் பிறக்க...

நாம் பிறக்க
நமை யாரும் கேட்கவில்லை
நாம் இறக்க
நம் விருப்பம் தேவையில்லை.

நமக்கு மேலே ஒருவனுண்டு
நமை ஆளும் கடவுளுண்டு
நாம் வாழும் நாட்களெல்லாம்
நல்ல அவன் கணக்கன்றோ?

துயரங்கள் வருவதுண்டு
துன்பங்கள் தொடர்வதுண்டு
தூய அவன் துணை கூட
தொடர்ந்து வரும் நம்பு.

துன்பத்திலே 'இன்பமுண்டு
துயரத்தில் 'உயர'முண்டு
'து'மட்டும் நீக்கிவிட்டால்
இன்பமாக உயர்ந்திடலாம்.

கடும்கோபம் உனக்குமட்டும் உளதல்ல
மாநிடராம் மற்றனைவர்க்கும் அதுவுண்டு
கண்டபடி காரணமின்றி வரும்போதே
கவலையினை அது நமக்கு தரக்கூடும்.

பிறர் நம்மை கோபமூட்ட வழியுண்டு
பிளவுபட்ட மனம் கூட அது செய்யும்
பிளவிற்கு காரணத்தை கண்டுவிட்டால்
பிரகேது கோபம் பின் எது தாபம்?

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விரும்புவதோ கிடைப்பதில்லை
இதன்பொருட்டு மனமுடைந்தால்
இனியுள்ள வாழ்க்கையும் கசக்கும்.


நாம் முதலில் மீள வேண்டும்
பிறரை நாம் மீட்பதற்கு
நாம் முடிவில் மடிதல் போதும்
பிறர் இன்னல் அகற்றிவிட்டு.

நமை நாமே அறிதல் வேண்டும்
நலமப்போதே கிடைத்துவிடும்
நம்பிக்கையுடன் முயலவேண்டும்
நமக்கு வரும் வெற்றி உறுதி.

மரணத்தை மறந்து விடு
மறுபடியும் வாழ்ந்துவிடு
மடிகின்ற மனிதத்திற்கு
மறக்காமல் வழிகாட்டு.

No comments: