Saturday 17 January, 2009

அமுதா-பிரபு மணவிழா

திருப்பலி வரவேற்பு:

பாசமிக்க அருட்பணியாளர்களே, நேசமிக்க உற்றார் உறவினர்களே, நண்பர்களே, இம்மணவிழா நாயகன்-நாயகி அமுதா-பிரபு செல்வங்களே உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கமும்...


மணக்கோலம் பூண்டு பூரித்து நிற்கும் இவ்விளம் தம்பதியினருக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள், காதல் கைகூடும் நாள், கடவுள் நிச்சயித்து ஆசீர்வதித்த நாள். இப்போது இறைமக்களாகிய நமது ஆசீருக்காக வேண்டி நிற்கின்றார்கள்... அவர்களுக்காக ஜெபிப்போம், அவர்களை வாழ்த்துவோம்...


பரிசுகள் என்பது பலவகை. ஆனால் ஒரு இளைஞனுக்கு, இளம் பெண்ணுக்கு அது கடவுள் தேர்ந்து தரும் வாழ்க்கை துனையைவிட மேல் வேறெதுவாகும்? "மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று கவிஞன் பாடியது அதனால்தான்போலும்! அத்தகைய பெரும் பேறை இவர்களுக்கு அளித்த அன்பிறைவனுக்கு நன்றி பலியாக இத்திருப்பலியை நிறைவேற்றி இவர்களை வாழ்த்துவோம்.


இவர்கள் குடும்ப வாழ்க்கை அன்பு, பண்பு, பாசம், நேசம் போன்ற அழகு கற்களால் கட்டப்பட்டு , உயிரெனும் தியாகத்தால் ஊட்டம்பெற்ற உயிர் ஓவியம்போல் திகழ இவர்களுடன் நாமும் சேர்ந்தே ஜெபிப்போம், இவர்களை வாழ்த்துவோம். இவ்வரிய நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் ஒவ்வொருவரையும் இத்திருப்பலிக்கு வரவேற்று விடைபெறுகின்றேன்...

காணிக்கை பவனி

தீபம்:
இனியநல் தேவனே, இருளில் இருந்து ஒளியை தோன்ற்றசெய்த அன்பு தெய்வமே, இருள் நிறைந்த எங்கள் உள்ளத்தில் உமது ஞானம் எனும் ஒளியை ஏற்றி கடவுளின் மட்சிமையாகிய அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க செய்து, இத்தம்பதியினரும் தீபம்போல் ஒளிபெற்று இறை மாட்சிமையில் இடம்பிடக்கவும் இத்தீபத்தை உம்திருமுன் அர்ப்பணிக்கின்றோம், ஏற்றருள்வாய் இறைவா...


மலர்கள்:
இனியநல் தேவனே, கதிரவன் தோன்றும் முன் மொட்டுக்கள் வாய் திறந்து நறுமணமெனும் வார்த்தையாலும் அழகான தன் வாழ்வாலும் இறைபீடத்தை அலங்கரித்து உம்மை போறறுகின்றது, மனிதனை மகிழ்விக்கின்றது. இந்த மலருக்கு இணையான இந்த மங்கை யார்மடி பிறந்தாலும், அந்த தாய் மடி மறந்து, தலைவனை சேர்ந்து நறுமணமென இயேசுவுக்கு , சாட்சியாக இறை இல்லமாம் இந்த இனிய நல் ஆலயத்தில் இம்மலர்களோடு இந்த மணமக்களையும் அர்ப்பணிக்கின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...


திரு விவிலியம்:
ஆதியில் வாக்கு இருந்தது... அனைத்தும் அவரால் உண்டாயின... அவரிடம் வாழ்வு இருந்தது... இதை கற்றறியசெய்த விவிலியம் வாழ்க. வாழ்வு வழங்கும் வள்ளலாம் இறைமகன் அன்பின் கட்டளைகளையும், நற்பண்புகளையும் நமக்கு உணரவைத்தது இவ்விவிலியமே. இத்தமப்தியினரும் தம் இல்லத்தில் விவிலியத்தை தீபமென ஏற்றி நாள் ஒரு அதிகாரமேனும் வாசித்து அதை வாழ முயன்று இறை ஆட்சியில் பங்களிக்க வேண்டி இத்திரு விவிலியத்தை அர்ப்பணிக்கின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...

அப்பம் :
கோதுமை மணி அரைந்து மாவாக்கப்பட்டு தூய நற்கருணை அப்பமாவதுபோல் நாமும் உடைந்து ஆன்ம பலிக்கான அப்பமாக அரைக்கப்படவேண்டும். வானக அப்பம் வையாக உணவாகி விண்ணக உறவில் உன்னுடன் வாழ வரம் தந்து எம்மைக்காத்த எம்மாபரனே இத்திருமண தம்பதியினருக்கு அன்றன்றைக்கு தேவையான உணவோடு ஆன்ம உணவாகிய அப்பம் எனும் போஜனத்தையும் கொடுத்து உதவ இவ்வப்பங்களை காணிக்கையாக்குகின்றோம், ஏற்றருள்வாய் இறைவா...


இரசம்:
திராட்சை பழங்கள் மிதிக்கப்பட்டு இரசமாவதுபோல் நம் வாழ்வு துயரால் மிதிக்கப்பட்டு வாழ்வு பலிக்காக இரச்மாகவேண்டும். இத்தகு தியாகத்தால் இத்தம்பதியினர் வாழ்வு வளமாகி, ஒளிர்ந்து புகுந்த வீட்டிற்கும் தங்களது புது குடும்பத்திற்கும் புகழ் சேர்த்து மானிடம் உயர, இறையரசு நிலவ தங்களையே அர்ப்பணிக்கவேண்டி இந்த இரசத்தை காணிக்கையாக்குகின்றோம், ஏற்றிடுவீர் இறைவா...

No comments: