சென்ற வாரம் இதே நாள்
திருச்சபை இயேசுவின் பாடுகளையும் அவரது
சிலுவை மரணத்தையும் தியானித்து தொடர்ந்து உயிர்ப்பை கொண்டாடியது. அதன் முந்தின
நாள், பாஸ்கா வியாழனன்று, திருச்சபை குருத்துவம், நற்கருணை மற்றும் பிறரன்பை
நினைவுகூர்ந்தது...
சிலுவைப்பலி நிறைவேறியது
வெள்ளிக்கிழமை... பாஸ்கா விருந்து (கடைசி இராப்போசனம்) நடந்தது வியாழன்... அப்படியிருக்க எங்ஙனம் வியாழனன்று குருத்துவம்
நினைவுகூரப்பட்டது? யூதர்களென அடையாளம் காட்ட அவர்களுக்கு கிடைத்த அரும்பெரும்
நிகழ்வே எகிப்து நாட்டின் அடிமைத்தளைகளிளிருந்து கடந்து (பாஸ்கா) பாலும்
தேனும் பொழியும் சுதந்திரத்தின்/விடுதலையின் நாட்டிற்கான பயணம்... தலைமுறைதோறும்
நினைவுகூரவேண்டிய நிகழ்வு... இதையே இயேசுவும் சீடர்களுடன் கொண்டாடியது... சீடர்
குழாமின் தலைவராக அவரே அந்த நினைவுக்கு தலைமை தாங்கினார்... ஆனால் இயேசு
தேவையான மாற்றங்களை செய்து
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றினார்.... பலிக்கடாவுக்கு பதில்
அப்பா-இரசங்களை சீடர்களோடு பகிர்ந்து விருந்துண்டார்.... அப்பத்தை தன் உடல்
எனக்கூறி பிட்டு கொடுத்தார், தொடர்ந்து இரசத்தை தம் இரத்தம் எனச்சொல்லி
அருந்தச்சொன்னார்.... தம்மையே பலியாக்கவிருந்த அவர் அதன் முன்னுதாரணமாக
கடைசி இராவுணவு விருந்தை அங்ஙனம் ஏற்பாடு செய்தார்...
பலியுடன் சம்மந்தப்பட்டது
குருத்துவம்... [கடவுளுக்கு ஏன்
பலி/காணிக்கை/ அர்ச்சனை/ படையல்? ஏன் அவரை
திருப்திப்படுத்தவேண்டும்? கடவுளக்கு குறை/அதிருப்தி ஏதேனும் இருக்கலாமா?
பயப்படவேண்டியவர் அல்லவே கடவுள்? ‘நான் இறைவன், வெறும் மனிதனல்ல...’ (Hos
11:9; Num 23:19). இதுவல்லவோ இயேசு நமக்கு சொல்லித்தந்தது... கடவுளை தந்தை என
அழைக்கக்கூட...
பலிகளே எவ்வளவோ
பரிணாமங்களுக்கு உட்ப்பட்டிருக்கிறது? தானிய பலி – மிருகபலி(தலையீறு)/ நரபலி
(ஈசாக் ஆபிரகாம் நிகழ்வில் நிராகரிக்கப்பட்டது) – ‘பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன்’ (Mt 12:7a)]
பாவப் பரிகாரமாக இன்னொரு
பொருளை, உயிரை பலியிடுவது எளிது... ஒன்றை பலியிட்டு இன்னொன்றை மீட்பதும் எளிது...
ஆனால் இயேசு தம்மையே பலியாக்கினார்... அந்த பலி அடுத்த நாள், புனித வெள்ளியன்று,
அவரது தந்தையின் சித்தமாக நிறைவேற்றப்படும்... அங்கேயும் பலிக்கென வேறு எதையும்
அவர் தேர்வு செய்யவில்லை, தம்மையே பலிப்பொருளும் பலிபீடமும் பலியிடும்
குருவுமாக மாற்றினார்... இந்த வகையில் இயேசு குருவெனலாம்... அர்ச்சகர் எனவும்
கூறலாம்...
இப்படி நோக்கின் இன்றைய
நமது எந்த குரு, உண்மைக்குரு எனக்கூற முடியும்? அது வேண்டாம், பாதம்
கழுவும் (Jn 13:1-17) சேவை செய்தாவது இயேசுவுக்கு
நிகர் ஆவார்களா? ‘... மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ (Mt
20:28 [20-28]).
குருத்துவம் பழமையானது,
புனிதமானது, புனிதப்படுத்துவது, தெய்வீக [தெய்வ-மனித) பரிமாற்றங்களுக்கு மனிதரை
தகுதியுடையவர்கள் ஆக்குவது, அருட்கொடைகளுக்கு வாய்க்கால், வடிகாலாவது... அந்த
வகையில் அது போற்றப்படத்தக்கது...
ஆனால் இதே குருத்துவம் காலப்போக்கில்
வசதிகளுக்காக, தற்பெருமைக்காக, பதவிகளாகவும் அதிகார அடையாளச்சின்னமாகவும்
கையாளப்பட்டது, ஒரு அதிகார/ஆதிக்க அமைப்பின் ஊடகமாக்கப்பட்டது...(I Sam
2:12ff) இத்தகைய
குருத்துவத்தை இறைவாக்கினர்கள் வன்மையாக விமரிசித்தனர் - (Jer
23:11; Eze 7:26; Hos 4:9)... இயேசுவும்கூட:
Lk 10:25-37 - நல்ல சமாரியர்
உவமை: குரு – லேவியர் – சமாரியர்: இம்மூவரில் எவர் அடுத்திருப்பவர்/அயலான்?
அவருக்கு இரக்கம் காட்டியவரே... இயேசுவுக்கும் குருத்துவத்துக்கும் ஏற்கனவே நிறைய
தூரம்...
திருச்சட்டத்தை,
இறைவாக்கினர்தம் அறிவுரைகளை, எச்சரிக்கைகளை தங்கள் வசதிகளுக்காக வளைத்து, ஒடித்து
இலாபம் பெற்றவர்கள் இந்த குருக்கள்... தேவாலயத்தை சந்தை/
வணிகக்கூடமாக்கியவர்கள்...பேரரசுக்கு
பேரம்போனவர்கள், அநீதிகளுக்குக்கூட பணிந்து போனவர்கள்...
இதே குருத்துவ தலைமைதான்
இயேசுவையும் எதிர்த்தது, நாசமாக்க நினைத்தது, சதித்திட்டம் தீட்டியது,
பொய்க்குற்றம் சுமத்தியது, பொய் சாட்சிகளை ஏற்படுத்தியது, அவருக்கு எதிராக மக்களை
திசை திருப்பியது, நிரூபிக்கப்படாத அத்தகைய குற்ற ஆரோபணங்களுக்காக அவரைக் கொல்ல
உரோமைப் பேரரசின் பிரதிநிதியை பய/ கட்டாயப்படுத்தி அவரை சிலுவையில் ஏற்றிக்
கொன்றது...(Mk 14:53 – 15:15).
[ஆக, இயேசுவினது அழைப்பு
சீடத்துவத்துக்கேயன்றி, ஒருபோதும் குருத்துவத்துக்கல்ல,
அர்ச்சகத்துவத்துக்குமல்ல... இதுதான் நற்செய்தி சாட்சியம். மாறாக காணப்படுபவையனைத்தும்
ஏதோ இலாப நோக்கங்களுக்காக பின்னால்
சொல்லப்பட்டவை, குறிப்பாக இயேசுவின் மரணத்திற்கு பின் பவுல் ஆக மாறிய
சவூலுக்குப்பிறகு, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திற்கு பிறகு... இன்னும்
சொல்லப்போனால் கான்ஸ்டன்டைன் பேரரசர்
‘கிறிஸ்தவம்’ தழுவியபிறகு...]
இதைப்போன்றே அவர் ஒரு அரசருமல்லர்.
அங்ஙனம் அவரை அரசராக்க மக்கள் முயன்றபோது அதைத் தவிர்க்க தனியாய் மலைக்கு சென்றவர்
(Jn 6:15). யூதர்களின் அரசன்
என்று கூறியதாக குற்றம் ஆரோபிக்கப்பட்டவர். அதுவே அவர் செய்த குற்றம் என
சிலுவையிலேயே எழுதிவைக்கப்பட்டவர் ( Jn 18:33-37; 19:3, 15, 19, 21).
அவரை ஒரு இறைவாக்கினராக
நற்செய்தி ஆங்காங்கே அறிமுகப்படுத்துகின்றது (மத்தேயு 16:14;
யோவான் 4:19). சம்பிரதாயங்களை,
அநியாயங்களை கேள்வி கேட்டிருக்கலாம் (மத்தேயு 5:21ff, 28, 38ff, 43; 7:5; 15:8-9, மாற்கு 2:27;
12:38ff; யோவான் 2:13ff, 8:7). அவரது நேர்மை,
சாதாரணத்தன்மை, பிறரிடம் அவர் காட்டிய பரிவு, அக்கறை என எல்லாம் மக்களை மிகவும்
கவர்ந்தது... கடவுளை பயந்து விலகி நின்ற மக்களை, அவரையே பாசத்துடன், உரிமையுடன்
தந்தை/ பிதா என அழைக்க கற்றுத்தந்தவர், அன்றுவரை இருந்த அமைப்பு, அணுகுமறை
அடிமைத்தனத்திலிருந்து விடுதல் தரும் வித்யாசமான அணுகுமுறை, அதிகார-ஆதிக்க
அடக்குமுறை அமைப்புகளை இயன்றவரை ஒதுக்கி வைக்க செய்தது.... எனவேதான் அவரை அடியோடு
தொலைத்துவிட துணிந்தார்கள்... அதற்காக ஆவன அனைத்தையும் செய்தார்கள், சிலுவையில்
ஏற்றினார்கள், கொன்றார்கள்...
பின் நிகழ்ந்தது,
தொடர்ந்தது அனைத்தும் அவர்கள் சற்றும் எதிர்பாராதது... அதுவே அவரது உயிர்ப்பு...
‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே
இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.... (Jn 12:24) / ‘...நான்
ஆடுகள் வாழ்வை பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்’ (Jn 10:10).
வாழ்ந்தபோது இருந்ததைவிட
இறந்தபின், அதுவும் அவரது நினைவே, சீடர்களை துணிச்சல் உள்ளவர்களாக்கியது, அவரது
இறையரசின் நற்செய்தியை துணிவுடன் எடுத்துரைக்க திராணி(வல்லமை)கொடுத்தது... அவரை கொன்றவர்களை கதிகலங்க செய்தது....
இயேசுவினுடையது ஒரு அமைப்பல்ல... அது ஒரு இயக்கம்...
ஒரு வழி... பாதை,
வாழ்க்கைப்பாதை... அங்கு ஏற்ற-தாழ்வுகள் இல்லை... சீடர்களே நண்பர்கள் ஆயினர்... சீடர்களின் கால்கள் கழுவிய குரு... ‘பணிவிடையேற்க்கவல்ல பணிவிடை செய்யவே’ வந்தவர் (Mk
9:33ff, 10:42-45... அதையே ஒரு அமைப்பாக்கவேண்டிய கட்டாயத்தில் சில இன்றியமையா ஊடகங்கள்
தேவைப்பட்டன...
அதையே சடங்குகளில் சம்பிரதாயங்களில் காண முயன்றனர்... அதற்காகத்தான் குருத்துவமும், குருக்களும், அர்ச்சகர்களும் பலியும், காணிக்கைகளும் தேவைப்பட்டன... [‘...காலம் வருகிறது.
அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப (கடவுள் உருவமற்றவர்) உள்ளத்தில்
வழிபடுவர்...’ Jn 4:21-24. ‘இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு
உகந்த ஆவிக்குரிய பலிகளை படைக்கும் தூயகுருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! I Pet 2:5b)]
ஆக, இயேசுவை ஒரு குருவாக, அரசராக எல்லாம் ஒப்பனை செய்து பிரகடனப்படுத்தினார்கள்... அதற்கு தேவையான இறையியல் படைத்தார்கள்... அதன் ஒரு எடுத்துக்காட்டே எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (யூதக் குருக்களுக்காக எழுதப்பட்டது..)... இதுபோக திருவெளிப்பாட்டிலும் (Rev 1:6; 5:10) ஆங்காங்கே
ஒருசில குறிப்புக்கள் காணலாம்....
இயேசு குருவானது
தம்மையே பலியாக்கியதால்... பலி மட்டுமன்றி அவரே பலிபீடமும் பலியிடும் குருவும் ஆனதால்... இன்று குருக்கள் எந்த வகையில் இயேசுவாகின்றார்கள்? மறு கிறிஸ்து என்பது என்ன? மந்திர வார்த்தைகளுக்கு அவற்றிலேயே சக்தி இருக்கிறதா? அதை உரைக்கும் நபரின் வல்லமை/வாய்மை/தூய்மை/புனிதம் தேவையில்லையா?
பாஸ்கா விருந்தை
ஏன் யோவான் தரவில்லை? பதிலாக பாதம் கழுவும் மாதிரிகையை ஏன் தந்தார்? நாமும் அதை செய்ய ஏன் கேட்டுக்கொண்டார்?
ஒருசிலருக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட குருத்துவத்தை பேதுருவின்
முதல் திருமுகம் அனைவருக்கும் அளிக்க துணிந்து புரட்சி படைத்தது எனக்கூறினால் மிகையாகாது
Mt
4:19 – ‘பேதுரு எனும் சீமோன் அவரது சகோதரன் அந்திரேயா: ‘என் பின்னே வாருங்கள்... அவரை பின்பற்றினார்கள்...’
Lk 5:27 – லேவி: ‘என்னை பின்பற்றி வா’
Lk
6:13 – ‘சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருத்தூதர் என்று பெயரிட்டார்.’
Lk
8:1ff – ‘பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவான்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.’
Lk
14:27– யார்
சீடர்? என்னைவிட எதையும் மேலாக கருதாதவர், தம் சிலுவையை சுமக்காதவரும் என்
சீடராய் இருக்க முடியாது...
Mt 12:46ff- சீடர்கள் தாயைவிட,
சகோதரர்களைவிட [அந்த வகையில் குருக்களைவிட] மேலானவர்கள் – அவர்களே ...தந்தையின்
திருவுளம் நிறைவேற்றுபவர்...
Mt 28:19 – Mission: ‘போய், எல்லா
மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்...’
Mt
6:25; Lk 9: 3, 10:4 – எதை உண்பது... குடிப்பது... உடுத்துவது என்றோ... கவலை கொள்ளாதீர்கள்...’
Lk 4:16ff; Is 1:11ff, 42:1ff (11-17); Am 5:21-24 – பலியல்ல நீதியே கடவுள்
விரும்புவது...
காணிக்கை (எரி
பலி): Gen 4:4, 8:10, 22:2
பலி - Ex
3:18; Heb 10:1-39
அர்ச்சகர் - Gen 14:8; Ex 18:1
குரு - Ex 31:10; Mt 8:4; Heb 2:17, 3:1, 4:14, 5:6, 9:11; Rev
1:6, 5:10; I Pet 2:5, 7
குருத்துவம் - Num 25:13
கிறிஸ்துவின்
குருத்துவம்: Heb 4:14 – 7:28
Heb 7:27 – ‘ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய
பாவங்களுக்காகவும், பின் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலிசெலுத்த
தேவையில்லை. ஏனெனில், தம்மையே பலியாக செலுத்தி இதை ஒரே முறைக்குள் செய்து
முடித்தார்...’
Heb 10:11-12 – ‘...ஒவ்வொரு குருவும் நாள்தோறும்... மீண்டும் மீண்டும்
அதே பலிகளைச்செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால்,
இவர் ஒரே பலியை பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.’
Heb 10:18 – ‘...பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்கு கழுவாயாக
செலுத்தும் பலிக்கு இடமேயில்லை...’
சீடர்கள்: Mt 10 :24 ; Lk 14 :27 ; Acts
1 :15, 6 :1,7, 11 :26, 20 :1, 7
திருவிருந்து-Lk 22 :14ff ; சிலுவை
மரணம் - 23 :26ff
காலடிகளை கழுவுதல் – சிலுவையில் அறையப்படுதல் - Jn
13 :1ff, 19 :17ff(28ff)
Priesthood: Vatican II -
Church II/10, Liturgy Chap I/G (of the laity), Priests