எண்துறையே என்துறையே
எண்ணமெல்லாம் இத்துறையே
எழுச்சிபெறக் காத்திருக்கும்
எழிலான துறையிதுவே.
நீர்நடுவே நிலமிருந்தால்
தீவென்பர் தீந்தமிழில்
நாற்புறமும் நீர்சூழ
தீவாகி நின்றாயே நிறைந்து.
தாய்மொழியாய் தமிழிருக்க
அரசமொழி வேறேனவே
அதைப்படிக்கும் கட்டாயம்
முன்னோர்க்கு நேர்ந்ததுவே.
தாய்மொழியே அரசு மொழியானபின்னும்
ஆண்டவனைப் போற்றுதற்கு
அம்மொழிக்கு இயலவில்லை
அதுவன்றோ நமது நிலை.
நிலமதிலே பிறந்தாலும்
நீர்தானே பிழைப்பெமக்கு
மீன்பிடித்து வாழ்கின்றோம்
மீள இது போதுமென்றோம்.
உலகமயம், வியாபாரம், லாபமென
மீன்தொழிலில் போட்டிவர
தொழில்நுட்ப துணையின்றி
தொலைந்திடுவோம் என்றுணர்ந்தோம்.
தொழில்நுட்ப துணையுடனே
தொலைதூரம் தாண்டிசென்றும்
மீன்வளம் கரைசேர்த்தோம்-நமை
மிஞ்ச இனி எவருண்டு?
உலகமய மேடையிலே முன்னேற
உழைப்புமட்டும் போதாது
உரியகல்வி பெறவேண்டும்
உயரவழி காணவேண்டும்.
காலம் கடந்து மட்டும் கல்விபெற்றோம்
காலம்தாழ்த்தாமல் உயர்ந்துவிட்டோம்
கடல்தாண்டி கண்டங்கள்தாண்டி
'கனவுல'கிலும் வந்துவிட்டோம்!
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
வையகம் தொடங்கட்டும் ஊரில் உறவில்
எண்துறையில் எம்துறையில் தொடங்குவோம்
எம்மவரில் நனவாக்குவோம் நம் கனவுகளை.
இதற்கு வடிகாலாக்குவோம் 'எண்துறை'யை
இருள்நீக்கும் விடியலாக்குவோமிதை
கிறிஸ்துமஸ்-புதுவருட பரிசெனவே
நம்மவர்க்களித்திடுவோம் 'எண்துறை'யை.
௨௩.௧௨.௨00௭