Sunday, 8 February 2009

கடையின் கதை [தொடர்ச்சி -௨]

இருபத்தியொன்றாம் தேதி: உன்னை விரைவில் அரியணையில் (ஆசனத்தில்) ஏற்ற நினைத்தோம், ஆணவம் கொண்ட அரசியாக அன்று அன்பால் மற்றவரை வரவேற்க. உன் இலட்சியம் 'குறைந்த விலை,' 'தரமுள்ள பொருள்,' 'சரியான (நல்ல) அளவு.' பல எதிர்ப்புகளை எதிர்த்து உன்னை வளர்த்திவரும் அந்த காலை ஏழு மணி நேரத்தில் வரக்கூடாதவர்கள் எங்களுடன் உன்னை பங்குபோட வந்தார்கள். மகளே! பெற்ற மனம் துடித்தது. பல கேள்விகள், பதில் கூறினோம். உன்னை வளர்த்த சட்டம் உண்டா என்றார்கள். பதினொன்று பேர் சேர்ந்து உன்னை வெளியுலகில் கொண்டுவந்தபோது சட்டத்தைப்பற்றி கேள்க்காதவர்களின் கேள்வி! அதையும் தாங்கினோம். உன்னை நவம்பர் மூன்றாம் தேதி கொலுவிருத்த நினைத்த அந்த நேரத்தில் கோலம் கெட்டவர்களின் இந்த கேள்வி! நீ அழுதபோது கரம் நீட்டி எடுக்காத கல்நெஞ்சரின் காட்டமான கேள்வி. உன்னை தொழில் சுமந்து உச்ச வெயிலில் அலைந்தபோது உதவாத உதாசீனர்களின் கேள்வி. தாங்கினோம் மகளே உன் எதிர்காலத்திற்காக, மற்றவர்கள் உன் வழிதொடர தாங்கினோம். நீ அழக்கூடாது, உன் மனம் வருந்தக்கூடாதென்று. நாங்கள் எங்களுக்குள்ளே உருகினோம். ஒருவர் இருவரின் அரவணைப்பில் நீ வளர்ந்தால் போதாது. அதையும் வித்தியாசமாக காண நினைத்தோம். அதற்காக, உனக்கு, உன்னை அரவணைக்க, பாசப்போர்வையில் வளர்த்த, அன்பு பணியில் நீ அடி எடுத்து வைக்க, உனக்காக ஒன்பது பேர்களை அமர்த்தினோம். உனக்கு பயம் என்று அல்ல, நீ பக்குவமாக வளர. உன்னைக் கண்டு பிறர் வளர. ஒரு விதமாக அனைவரின் குறைகளையும் மீறி முன்னேறினோம்.
இருபத்திமூன்றாம் தேதி: படித்தவர்கள் உன்னை அறியவேண்டுமென்று பள்ளிக்கூடம் சென்றோம். பலர் எங்களை நிமித்தம் வரவேற்றார்கள். நீ அவர்களின் வீடுவரை செல்வாய் என்று அறிந்து விரும்பி பங்கெடுத்தார்கள். நீ நன்றாக வளர்வதற்கு அறிவுரை பல அள்ளி மொழிந்தார்கள். அன்பால் நீ வானளவு உயரவேண்டுமென்று வாயார வாழ்த்தினார்கள். நல்லவர்கள் மத்தியில் தீயவர்கள் இருப்பது இயற்கையே. அதற்க்கு நம் பள்ளிக்கூடம் விதிவிலக்கல்ல என்று சில வீணர்கள் எடுத்துக்காட்டானார்கள். உதட்டளவில் சில உதாசீல அறிவுரைகள், உள்ளத்தளவில் பொறாமைத்தீ கொழுந்துவிட்டெரிய,
உன்னை ஈன்றெடுத்த எங்களை இரக்கமின்றி பார்த்தார்கள். இதேப்போன்று ஆயிரம் பார்வைகண்ட அஞ்சா நெஞ்சுடையவர்கள் துச்ச்சப்பார்வையை தூசியென மிதித்து மகளின் மானம் காக்க மானிடரைத் தேடி மகளே உனக்காக அலைந்தோம்.

No comments: