அந்த அக்டோபர் இரண்டாம் தேதி. ஆம், எங்கள் வாழ்வில் வசந்தகாலம் வீச, புதியதோர் பாதையில் நாங்கள் நடக்க, எங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று கேலி பேசிய அனைவருக்கும், நாங்கள் மாதிரியாக திகழ இறைவன் தந்த நல்ல நாள். அன்று தான் எங்கள் வாழ்வின் புதிய சகாப்தம் காணத் துடித்த அந்த நாளை மறக்க முடியுமா?
பதினேழாம் தேதி: அரபிக்கடலின் அலைகளின் சத்தம் கைகொட்டி எங்களை வரவேற்க, காலைக் கதிரவன் எங்களுக்கென்றே தனது மிதமான ஒளியைக் கொடுக்க, இளம் தென்றல் காற்று இதமாக வீச, தூதூரின் முத்துக்கள், வருங்கால வைரங்கள் (எங்கள் அண்ணனுடன் மேடையில் கூடினர். ஆம், அன்றுதான் எங்குமே நடந்திராத அதிசயம் எங்கள் மத்தியில் நடந்தது. சோதனை முறியடித்து சாதனை புரிவோம் என்ற கனவு நனவாகத் தொடங்கியது. எங்கள் அங்காடி எங்களில் கருவுறத் தொடங்கியது. எங்கும் நடந்திராத, நடக்க முடியாத அதிசயமாக நாங்கள் பதினொன்று பேர்கள் சேர்ந்து, ஒரு குழந்தைக்கு தாயானோம். அதன் பிறப்பை நினைத்து சிரிப்பதா அழுவதா என்ற இனம் புரியாத கவலை. அனைவரும் நடப்பது நடக்கட்டும் என்று சுமந்தோம்.
பத்தொன்பதாம் தேதி: ஒரு குழந்தையை ஒரு தாய் பத்து மாதம் சுமக்கிறாள். ஆனால் நாங்கள் இரண்டே நாட்களில் சுமந்தோம். அது உலகைப் பார்க்கும் சமயம் வந்ததும், எங்களால் அந்த மகிழ்ச்சி கலந்த வேதனையை தாங்க முடியவில்லை. இரண்டே நாட்களில் நாங்கள் சுமந்த குழந்தை அனைவரின் தடையை மீறி பிறந்தது. இதற்க்கு பெயர்வைத்து மகிழ ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆளுக்கொரு பெயர் கூறினார்கள். முடிவில் அனைவரும் 'மீனவ பல்பொருள் அங்காடி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்.
பெண்குழந்தை பிறந்ததென்று வருந்தும் கலியுகத்தில்
பெண்குழந்தை பிறந்ததென்று மகிழ்ந்தோம் - தங்கள்
அழகுக் கெடும் என்று பால் கொடுக்காத இந்த நாளில்
அன்பில் அனைவரின் செந்நீரை கொடுத்தோம்.
மங்கை அவள் பிறந்துவிட்டால் வீட்டிற்கு பாரம்- எங்கள்
மங்கையை விரைவில் வளரவைத்தோம்
அனைவரின் மாதிரியாக...
ஆம், எங்கள் குழந்தை வளருவதை கண்டு மகிழ்ந்தோம். மகளை வளர்க்க எங்களுடன் இன்னும் நண்பர்கள் சேர்ந்தார்கள். ஆக, நாங்கள் இருபத்திநான்கு பேருமாக சீராட்டி பாராட்டி வளர்த்தோம்.
ஊருக்கு அவள் ஒரு பிள்ளை
உலகிற்கு அவள் செல்லப் பிள்ளை
பலருக்கு அவள் பிள்ளை
பார்ப்பவர்க்கு அவள் எடுப்பார் கைப்பிள்ளை.
ஒடுங்கிய மனப்பான்மையில் மகளை நாங்கள் மட்டும் சொந்தமாக்க விரும்பவில்லை. ஊர் அவளை அறியவேண்டும். பின்பற்றவேண்டும், பாடமாக்கவேண்டும், மாதிரியாகவேண்டும். எனவே அவளின் பெயரில் பங்குதாரர்களை அழைத்தோம். மகளே, உன்னை வளர்த்த வழியில்லாமல் பங்கு கேட்கவில்லை. நீ வீதியில் உலாவ கிராமப் பெண்களுக்கு முன்மாதிரியாக வேண்டும் என்றே உன்னை உலகிற்கு தியாகம் செய்தோம்.
இருபதாம் தேதி: உன் பங்கை மக்களிடம் எடுத்து சென்றோம். நீ விலைமாது என்று அல்ல, விடி விளக்கு என்று. எங்கள் முதல் முயற்சியிலேயே மக்கள் வரவேற்று உன்னிடமிருந்து பலனடைய முன்வந்தார்கள். ஆம், என்று முதல் எங்களுக்கு ஊண் எங்கே, உறக்கமெங்கே? ஊரெல்லாம் அலைந்தோம், தெருவெல்லாம் சுற்றினோம். இடையிடையே சில தடைகள் தாண்டினோம், ஏளனம் ஏற்றுக்கொண்டோம்.
No comments:
Post a Comment