நம்பிக்கை நக்ஷத்திரங்கள்!/ சாத்தியக்கூறுகளின் சன்னதி...!
[எமது கிராமத்தின் இலக்கிய மலர் 'தீபகற்ப தென்றல்-2013 -க்கு ]
'குழல் இனிது யாழ் இனிது என்பர் -மக்கள்தம்
மழலை சொல் கேளாதவர்.' - திருக்குறள்
குழந்தைகள் 'நக்ஷத்திர சிதறல்கள்' என்றும் யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். மட்டுமா, 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஓன்று' என்றும் பாடக்கேட்டிருப்போமே. இவர்கள்தான் பெற்றோரின் பெருமை, மற்றோரின் மகிழ்ச்சி , குடும்பங்களின் குதூகலம்... அனால் இன்று இந்த பச்சிளம் குழந்தைகளே குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்... இதை விசித்திரம் என்று சொல்வதா, விதியின் விபரீதம் என்பதா? இந்த நாட்டை, ஏன் நாகரிக உலகையே நடுக்கிய டில்லி பாலியல் வன்முறை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குழந்தையைப்பற்றியும் கேட்டு நடுங்கியவர்கல்தானே நாமெல்லாம். [இந்திய தண்டனை சட்டப்படி 18 வயது நிறைவுபெறாதவர் எல்லாம் குழந்தைகளே!]
இந்த பின்னணியில் ஒரு பிரபல மலையாள நாளிதழ் 'மாத்றுபூமி ' 2.10.2013 முதல் 7.10.13 வரை "'இன்னொரு குற்றம் இன்னொரு தண்டனை' எனும் தலைப்பில் ஒ .ராதிகா எழுதிய ஒரு கட்டுரைத்தொடர் பிரசித்தப்படுத்தியது. குழந்தைகளுக்கான நீதிமன்றம் 'ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு' நமது அண்டை மாவட்டமான திருவனந்தபுரத்தில் மட்டும் இந்த வருடம் 92 வழக்குகள் வந்ததாக தெரிகின்றது!
இப்படி சென்றால் நாளை எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே பயமாக இருக்கிறதல்லவா! நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பத்திரப்படுத்துவோம், கூடவே நமதையும் . 'பழுது பார்ப்பதைவிட படைப்பதே மேல்' என்று புரிந்துகொண்டு அதற்க்கான அனைத்து முயற்ச்சிகளையும் செய்வோமா...
குழந்தைகளை தவறவிட்டு பின் தண்டிப்பது எவ்வளவு விசித்திரமோ, அவ்வளவு விசித்திரம் அவர்கள் தப்பான முறையில் வளர்க்கப்பட்டு பின் நேர் வழிக்கு கொண்டுவர முயற்ச்சிப்பது. எனவே , எப்போதிலிருந்து அவர்களுக்கு 'பயிற்சி ' தேவை என்று பார்ப்போமா?
நமது புராணங்களில் இது சம்பந்தமான ஒரு அழகு நிகழ்வு உண்டு: பாரத போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யு அமைத்த சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் அகப்பட்டு கொண்டதுதான் இந்த நிகழ்வு. இதன் காரணம் என்னவென்றால் , அப்போரின் முன் பார்த்தசாரதி கண்ணன் பார்த்தன் /அர்ஜுனன் வீட்டுக்கு வந்து போர் தந்திரங்கள் பற்றி விவாதிக்கிறான், குறிப்பாக துரோணரின் சக்கரவியூகம்பற்றி. அவ்வேளை அபிமன்யுவை கர்ப்பத்தில் சுமந்த சுபத்ராவும் அங்கிருந்தாள் . களைப்பால் அவள் தூங்க சென்றபிறகே வியூகத்திலிருந்து வெளியேறும் தந்திரம் விவாதிக்கப்பட்டது. கர்ப்பத்திலிருந்து இதை பதிவு செய்ய முடியாமல் போனாதாலேயே அபிமன்யு வெளியேற முடியாமல் அகப்பட்டுகொண்டான்!
இதற்கும் நிகரான ஒன்று லூக்கு நற்செய்தியில் (1:44...) பார்க்கிறோம். "உம வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று' என்று எலிசபெத்து மரியாவை பார்த்து கூறுகிறாள்.
இந்த வேதாகம கூற்றுகளை இன்றைய அறிவியலும் அமோதிக்கின்றது ! இதையே 17.10.2013 அன்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழ் [திருவனனதபுரம் பதிப்பு] அறிவியல் தொழில்நுட்ப பக்கத்தில் (16) டி.பாலசுப்ரமணியனின் கட்டுரையில் சுட்டி காட்டுகின்றது.
ஏன் இதை சொல்கிறேன் என்றால், குழந்தை வளர்ப்பு கருவிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டுகொள்ளவே . குழந்தை ஒரு வயது எட்டுமுன்னே அதன் மூளை மூன்று மடங்கு வளர்ந்துவிடுகிறது. அதற்கு தேவையான ஊட்ட சக்தி நிரம்பிய உணவுகள் மற்றும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் சூழலையும் நாம் தரவேண்டும். தாயை பராமரித்தல்,அன்பு செய்து ஆதரித்தல், மகிழ்ச்சியான சூழலில் இருக்கவைத்தல் குழந்தைக்கு மிக முக்கியம்.எதிர் மறையான, முரண்பாடான சூழலில் வளரும் குழந்தைகள் பிரச்சினைக்காரர்கள் ஆவது சுலபம். இன்றைய நமது உலகு அதற்கு சாதமானதும்கூட. எனவே அனைத்து கவனமும் அளித்து நல்லதோர் உலகுக்கு குழந்தைகளை இட்டு செல்வோம்.
பிரசவத்துக்கு பின் பள்ளிக்கூடம் போகும் வரையுள்ள காலமும் மிக கவனமாக, அக்கரையோடு பார்த்துகொள்ளவேண்டியது. கலீல் ஜிப்ரான் எனும் மேதை சொல்வதை கேளுங்கள்: 'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் ஜீவனின் தீவிர ஆவல்கள்,ஆவேசங்கள். உங்கள் வாயிலாக வருகிறார்கள் எனினும் உங்களிலிருந்து வரவில்லை; உங்களோடு இருந்தாலும் உங்களுக்கு சொந்தமானவர்களல்ல...' அவர்கள் கடவுளின் அற்புத கொடைகள் ! அங்ஙன மே உலகமும் அவர்களை கொடையாக ஏற்றுகொள்ள செய்வோம்.
இத்தகைய பிள்ளைகளை பார்த்தல்லவா , 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்றும், 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன மகன் சான்றோன் என கேட்ட தாய்' என்றும் பாட வள்ளுவ பெருந்தகையை தூண்டியது.
நமது கவியரசு கண்ணதாசன் தமது 'இயேசு காவியத்தில்' பாடுவதை பாருங்கள்: 'ஆண்டொரு பிள்ளை ஆயிரம் பெறலாம்; இயேசுவைப்போல இன்னொரு பிள்ளை ஈசனைக்கேட்டே இனிப்பெற வேண்டும்..!' நம் பிள்ளைகள் 'வீழ்ந்தால் விதையாக விழவேண்டும், எழுந்தால் கதிரவனாகவும்'! பாரதி பாடியதைப்போன்று, 'ஒளி படைத்த கண்ணினாய், உறுதிகொண்ட நெஞ்சினாய், வலிமைகொண்ட தோளினாய்' எல்லாம் வரவேண்டாமா?
இத்தகை குழந்தைகளல்லவா நமது நாளைய எதிர்பார்ப்புகள்... நம்பிக்கை நக்ஷத்திரங்கள்... எல்லையில்லா வானத்தை எல்லையாக்கி சாதனை புரியட்டும், சரித்திரம் படைக்கட்டும். வாழ்க மானுடம், வளர்க மனிதநேயம் !
[பணி .பங்கிராஸ் அருளப்பன் , வழக்குரைஞர் , திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள்.. 25.10.2013]
No comments:
Post a Comment