12.01.2015:
- Adv. Pankiras A
பெண்களும்
சட்டமும்
-
கூடல்.காம் - Thursday,
July 31, 2003
கிராமத்தில்
வாழும் ஒரு பெண் கிராம வாழ்க்கை பிடிக்காமல் பட்டணத்திற்குச் சென்றால் சுகமாக
வாழலாம் என்ற எண்ணத்தில் பட்டணத்திற்கு புகைவண்டியில் பயணம் செய்கிறாள். பயணம் செய்யும்
பொழுது வழியில் யாரோ ஒருவர் அவள் கொண்டு வந்திருந்த பணம் அனைத்தையும் திருடி
விட்டார். புகைவண்டி நிலைய காவலர் ஒருவர் பார்க்கின்றார். அந்த பெண்ணைத் தன்னுடன்
கூட்டிச் செல்கின்றார். திருமணம் முடித்துக் கொள்வதாகக் கூறுகின்றார். ஆறுதல்
வார்த்தைகள் பேசுகின்றார். அந்த பெண்ணும் அவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
குழந்தையும் பிறக்கிறது. அதன் பிறகு பிரச்சனைகள் துவங்குகின்றன. அவன் விட்டுச்
செல்கின்றான், அவள் பட்டணத்தில் ஆதரவு
கொடுக்க ஆளின்றி துன்புறுகின்றாள். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. இங்கே இந்த குழந்தை
சட்டப் பூர்வமான குழந்தையா? அவர்களது உறவை சட்டப்படி
திருமண உறவு என்று ஏற்றுக் கொள்ள இயலுமா? பதில் வேண்டுமா? பதில் வேண்டுமா?
ஏழைக்குடும்பத்தில்
பிறந்தவள் இவள். இவள் பெயர் கனகா. இவளுக்கு திருமணம் செய்து வைக்கப் பணம் இல்லையே
என்று மிகவும் வருத்தத்துடன் இவளது பெற்றோர் இருக்கின்றனர். அங்கே வருகின்றான்
பாலு, வரதட்சனை ஏதும் இன்றி கனகாவை
மணந்து கொள்வதாகக் கூறுகின்றான், தான் ஒரு அரசு அலுவலர் என்றும் தெரிவிக்கினற்‘ன். இதை கனகாவின் பெற்றோர்
நம்புகின்றனர். எளிய முறையில் திருமணம் நடந்து முடிகின்றது. இருவரும் பாலுவின்
வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கே பாலு கனகாவை விபச்சாரத்தில் ஈடுபட
வற்புறுத்துகின்றான். கனகா மறுக்கிறாள், கொடுமைகள் ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் கனகா
மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகிறாள். இவ்வாறான பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கு
சட்டம் என்ன தீர்வு கூறுகின்றது.
சட்டங்கள்எவ்வாறுதோன்றின?
ஒரு
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட
இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப்
புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து
கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.
ஏறத்தாழ
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக
மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினார். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக
வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒரு வழி வந்த உறவினர்கள்
ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர்.
பெண்கள் உணவு வகைகள் தேடிக்கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர்.
இவ்வாறு பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு
படிப்படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? என்ன செய்யலாம்? இங்கே தான் சட்டம் உதவிக்கு
வருகின்றது. இந்தப் பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட
மதக் கோட்பாடுகளும் சட்டங்களும் பெரிதும் உதவின. "பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற
நாட்டவனுக்கு உரியன உடையன" என்று மனுநீதி கூறுகின்றது.
ஒரு
ஆண்மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்துவ மதம்
வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை
செய்து வைத்திருக்கின்றது.
சட்டமும், கலாச்சாரமும் நெருங்கிய
தொடர்புடையன. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு
பெண்ணடிமைக் கலாச்சாரம் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்களும்
பெண்களுக்குப் பெரிதும் எதிராகவே அமைகின்றன.
பெண்
சிசுக் கொலை : "பெண் குழந்தைக் கொலை"
என்பது பழங்காலந்தொட்டே, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப்
பெற்று தலைவிரித்தாடும் ஒரு கொடுமையாகும். இன்று வரை அது நாட்டின் ஒவ்வொரு மூலை
முடுக்குகளிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்பது ஒரு
மறுக்க முடியாத யதார்த்தம். வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த
காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம்"1870-ம் ஆண்டு அமலுக்குக் கொண்டு
வரப்பட்டது. அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 119 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால்....? பெரிதாக என்ன மாற்றத்தைக்
கண்டுவிட்டோம்? இன்றும் கிராமப்புறங்களில்
இந்தக் கொடுமை பெரிதும் தலை விரித்தாடவில்லையா? இல்லை என்று நாம் நினைத்தால் அது அறிவீனம்.
நமது செய்தித்தாளைப் புரட்டினால் இன்றும் இச்செய்திகளைக் காணலாம். பெண்
குழந்தைக்களுக்கான எமன்கள பல வடிவம் கொண்டு உல்லாச உலா வருகின்றன என்பதே உண்மை.
என்னென்ன வடிவங்கள்....எருக்கம்பால், நெல்மணி (உயிரைக் காக்கும் உணவா? அல்லது பறிக்கும் எமனா? ) காப்பித்தூள், உப்பு இன்னும் எத்தனையோ? இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை
தண்டிப்பதாக இருந்தால் தண்டனை மிகக் குறைவானது தான். இது கொலையல்லவா?.... இந்திய தண்டனைச் சட்டத்தின்
பிரிவு 302-ன் கீழ் கொலை என்று கருதி
ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்காமல்
இந்த அலட்சியம் ஏன்? சாவதும் அழிவதும் பெண் இனம்
தானே?...
கருவறை
எமன்கள்:
இந்த
கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே சமாதி கட்டிவிட பல புதிய
கண்டுபிடிப்புகளும் தோன்றிவிட்டன. கருவிலேயே ஒரு குழந்தையின் ஊனங்கள் அறியக்
கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த அறிவியல் பரிசோதனை இன்று பெண் குழந்தைகளின் கருவிற்கே
எமனாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகள் மட்டிலும் 78,000 பெண் குழந்தைகள் கருவிலேயே
சமாதி ஆகியிருக்கின்றன. இது பம்பாய், டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரும்பான்மையாக
நிகழ்கின்றன. நம் நாட்டிலுள்ள மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் அதிவேகமாக பரவி வருகின்ற
இக்கொடுமையைத் தடுக்க என்ன செய்யப் போகின்றோம்?
1971-ம் ஆண்டு நமது அரசு
கருக்கலைப்பை சட்டப் பூர்வம் ஆக்கும் வரையிலும் கருக்கலைப்பு என்பது இந்திய
தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒன்றாகவே இருந்தது.
1971-ம்
ஆண்டுச் சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யலாம் என்று
கூறுகின்றது.
1 கர்ப்பிணிப் பெண்ணின
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலோ,
2 பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்றவை பாதிக்கப்படும்
என்றாலோ,
3 மருத்துவர் சரியென்று
எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ, கருச் சிதைவு செய்யலாம்.
இன்று
பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்க மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சட்டத்தையே
பயன்படுத்துகின்றனர். கருவுற்றிருக்கும் பெண் கருத்தடை சாதனங்களைப்
பயன்படுத்தியும், அவள் கருவுற்றிருப்பதால்
கருத்தடை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு இன்று
பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாகிக் கொண்டு இருக்கின்றன.
இதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து பெண் விடுதலைக் குழுக்கள் குரலெழுப்பின.
இதனைக் கண்ட நமது மத்திய அரசு இக்கொடுமையைத் தடுப்பதற்காக சட்டங்களை அந்தந்த
மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பெண் விடுதலைக்
குழுக்கள் தொடர்ந்து போராடியதால் மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை
அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆந்திர", அஸ்ஸாம், பீஹார், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மேற்கு வங்களாம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்கள்
இதைப் பற்றி கவலைக் கொண்டதாகவே தெரியவில்லை. கர்நாடகம், ஓரிசா, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்
இதைக் கருத்தில் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றது.
முடிவெடுப்பது எப்போது? இந்தியா முழுவதும் ஒரே
சட்டம் வருவது எப்போது?
மகாராஷ்டிரா
மாநில குழந்தைப் பிறப்பின் முன் செய்யும் பரிசோதனைகளை முறைப்படுத்தும் சட்டம் - 1988.
1988-ம் ஆண்டு மே மாதம் 10-ம் நாள் அமலுக்கு கொண்டு
வரப்பட்டது இந்த சட்டம்.
1. ஏற்கனவே இருக்கின்ற பரிசோதனை முறைகளை முறைப்படுத்துவதோடு
நின்று விடுகின்றது.
2. குழந்தைப் பிறப்பதற்கு முன் பரிசோதனை செய்ய சில
வரையறைகளைக் கொடுக்கின்றது. எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இந்தப் பரிசோதனையை மேற்
கொள்ளலாம்?
அ. பெண் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்
ஆ. இதற்கு
முன்பு 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட
தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
இ. ஆபத்து விளைவிக்ககூடிய மருந்து
உட்கொண்டிருந்தால் அல்லது அபாயகரமான கதிர்கள் ஊடுருவக் கூடிய தொழிற்சாலைகளில் வேலை
செய்தால்.
ஈ. பாராம்பரிய நோய்களினால் பாதிக்கப்பட்ட
குடும்பத்தினராக இருந்தால் இந்தப் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்தலாம்.
3. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இப்படிப்பட்ட தனியார் பரிசோதனை கூடங்களை ஒழித்துக் கட்டாமல் அவற்றை
முறைப்படுத்துகின்றது. அவை அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வழிவகுத்துக்
கொடுக்கின்றது.
4. இதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும்
கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றது.
5. இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்
பெண்ணையும் (சமுதாய கட்டுப்பாடு அழுத்தம் இவற்றால் பரிசோதனையை செய்பவள்) மற்ற
குற்றவாளிகளையும் கணவர், மாமியார், (பெண்ணைப் பரிசோதனையைச்
செய்யக் கட்டாயப்படுத்துபவர்கள்), டாக்டர்கள், பரிசோதனைக் கூடத்தை நடத்துபவர்கள் போன்றவர்களையும் ஒரே
மாதிரியாகப் பார்க்கின்றது; தண்டனைக் கொடுக்கின்றது.
இதில் பெண் என்பவர் சமூக, குடும்ப, கலாச்சாரக்
கட்டுப்பாடுகளினால் உருவான கட்டாயத்தின் பேரில் தன்னைப் பரிசோதனைக்கு
உட்படுத்துபவள்; அவளையும் குற்றவாளிக்
கூண்டில் நிறுத்துவதென்பது எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய ஒன்றாகும்.
6. இந்த சட்டத்தின் கீழ் புரியும் குற்றம் பிணையில்
விட முடியாத சமரசம் செய்ய முடியாத பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும்.
இவ்வாறு
ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் விருப்பத்திற்கேற்ப பல ஓட்டைகளுடன் வெவ்வேறு
சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டு வருமாறு
பெண்களும், சமூக நல விரும்பிகளும்
இணைந்து குரலெப்பினால் நல்லது.
இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பெண்கள் தொடர்பான பிரிவுகள்
இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தையும் நோக்கினால் பெண், ஆண் என்பவரின் உடைமை, சொத்து என்பதை மறைமுகமாகவோ
அல்லது நேரிடையாகவோ வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பது தெள்ள தெளிவாக
விளங்கும்.
ஆபாசப் புத்தகம், விளம்பரம் பிரிவுகள் 292, 292 ஏ, 293, 294 என்ன சொல்கின்றன?
ஆபாசமான
புத்தகம், விளக்கம், படம், ஒவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை
செய்கின்றன. ஆபாச விளம்பரம் செய்வதை தடை செய்கிறது. ஆபாச செயல்கள், பாடல்கள், இவற்றை தடை செய்கிறது.
தண்டனை
என்ன தெரியுமா?
- பிரிவு 292 இரண்டு ஆண்டுகள் வரை
சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
- பிரிவு 292ஏ குறைந்த அளவு தண்டனை ஆறு
மாதச் சிறைக்காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்படாமல் சிறைக்காவல் அல்லது அபராதம்
அல்லது இரண்டும்.
- பிரிவு 293 ஆறு மாதங்கள் வரை
சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
- பிரிவு 294 மூன்று மாதங்கள் வரை
சிறைக்காவல் அபராதம் அல்லது இரண்டும்.
1925-ம்
ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச்சட்டம் கொண்டு
வந்தது.
இன்று
ஆபாச விளம்பரங்கள் இல்லையா? பாடல்கள் இல்லையா? செய்கைகள் இல்லையா? பெண்ணை அலங்காரச்
சின்னமாகவும், போகப் பொருள்களாகவும்
பார்த்தே பழகிவிட்ட இந்த கலாச்சார அமைப்பிலே சட்டங்கள் பெரிதாக என்ன செய்து விடும்
பெண்ணை
அவமதித்தல்: பிரிவு 354 :ஒரு பெண்ணுடைய
கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்றக் கருத்துடன் அல்லது தெளிவுடன்
அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
தண்டனை:
இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கட்டாயத்
திருமணம்: பிரிவு 366: ஒரு பெண்ணைப் பலாத்காரமாக
வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி
அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று
தெரிந்திருந்தும், கவர்ந்து செல்வது, அல்லது கடத்திச் செல்வது
குற்றமாகும்.
தண்டனை:
பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும்.
பிரிவு
366ஏ: பதினெட்டு வயதுக்கு குறைந்த
ஒரு பெண்ணை, பிறருடன் கட்டாயப்
புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு
அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து
மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும்.
தண்டனை:
பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும்.
விபச்சாரத்தில்
ஈடுபடுத்துதல்: பிரிவு 373 : பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை, எந்த வயதிலாவது
விபச்சாரத்துக்கு அல்லது முறைகேடான புணர்ச்சி அல்லது வேறு சட்ட விரோத அல்லது
ஒழுக்கக்கேடான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய
நிலைக்கு பலியாகலாம் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்குப் பெறுவதும்
அல்லது வேறு எந்த வகையிலாவது தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றமாகும்.
தண்டனை
: பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும். இன்று இந்தியாவில் கணக்கெடுத்துப்
பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள். இந்த சட்டங்கள் இருந்தும்
இந்நிலைக்கு என்ன பதில் சொல்ல?
ஹசினா
என்ற 9 வயது சிறுமி, பெங்களூர் நகரத்தின் ஒரு
சுமாரான குடும்பத்தைச் சார்ந்தவள்: தந்தையைச் சமீபத்தில் இழந்து விட்டாள். அவளுடைய
உறவினர் ஒருவர் அவளுக்கு வீட்டு வேலை ஒன்று வாங்கி தருவதாக வாக்களித்து
பம்பாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஹசினாவை காமத்திபுரா (பம்பாயில்
அதிகமாக விபச்சாரம் நடக்கின்ற இடம்) என்ற இடத்தில் விற்று விட்டார். இங்கே இந்த 9 வயது இளஞ்சிறுமி
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டாள்: பல இரவுகள் தொடர்ந்து இவ்வாறான கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டாள். அவள் இந்தத் தொழிலை முற்றிலுமாக வெறுத்தாள். ஆனால்
இதிலிருந்து தப்பித்துச் செல்வதற்குத் தான் வழி தெரியவில்லை. மெதுவாக அவள் போதைப்
பொருட்களை எடுக்கும் பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். இன்று அவள் போதை மருந்தை
வாங்குவதற்காகப் பணம் ஈட்ட எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள்.
இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளோ?
பலாத்காரம்
(வன்முறைப்புணர்ச்சி):
பலாத்காரம்
என்றால் என்ன?
பிரிவு
375: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன்
கீழ்க்கண்ட 6 சூழ்நிலைகளில் உடல்
புணர்ச்சிக் கொண்டால் பலாத்காரம் ஆகும்.
1. அவளுடைய விருப்பத்திற்கு
மாறாக
2. அவளுடைய சம்மதமின்றி
3. அவருக்கு அல்லது அவளுக்க நெருக்கமான
ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படம் என்ற அச்சுறுத்தலின் பேரில்
அவளுடைய சம்மதத்தைப் பெற்று.
4. அவளுடைய சம்மதத்துடன் அந்த
ஆள் தான் முழுமையாக அவளுடைய கணவன் இல்லையென்று தெரிந்த போதிலும் அந்தப் பெண்தான்
அவளுடைய சட்டப்பூர்வமான மனைவி என்று நம்பியிருக்கும் போது.
5. அவளுடைய சம்மதத்துடன் - அந்த
சம்மதம் புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும் போது பெறப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலைகளில் அவளுடைய சம்மதத்தின் தன்மையையோ, விளைவுகளையோ அவளுக்கு
புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது.
6. இவளுடைய சம்மதம் இருந்தும்
அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய
ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்.
மதுரா
வழக்கு: மதுரா என்ற 15 வயது பெண் மகாராஷ்டிரா
மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
இந்தக் குற்றவாளிக் காவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட காரணங்களுக்காக
விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த
பெண் எதிர்த்துப் போராடியதற்கான எந்த ஒரு அடையாளமும் அவளது உடலில் இல்லை .
அவள்
உதவிக்கு யாரையும் கூச்சலிட்டு அழைக்கவில்லை .
ஏற்கனவே
இவள் காதலுடன் உடல் புணர்ச்சிக் கொண்டிருக்கிறாள்
இதனைக்
கேள்விக் கேட்டு எதிர்த்து பல பெண் விடுதலை இயக்கங்கள் குரல் எழுப்பின. போராடின
இதன் விளைவாக 1983-ல் இந்தப் பிரிவில் சில
மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவு
376 சொல்கின்றது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள
நபர்களல்லாத பிறர் செய்யும் பலாக்காரத்திற்கு குறைந்த பட்சம் 7 வருடம் முதல் ஆயுட்காலம்
சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1. போலீஸ்
அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
2. சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை
அங்குள்ள ஆண் ஊழியர்கள் பலாத்காரம் செய்தல்.
3. பெண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம்
ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு உள்ள
பெண்ணை பலாத்காரம் செய்தல்.
4. கற்பிணிப் பெண்ணை பலாத்காரம்
செய்தல்.
5. 12 வயதுக்கு குறைவான வயதுடைய
பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
6. குழுவாக சேர்ந்து பலாத்காரம்
செய்தல்.
இக்குற்றங்களுக்கு
குறைந்த பட்சம் 10 வருடம் முதல் ஆயுட்காலம்
சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இதை
நாம் ஆழமாக சிந்தித்தால், விவாதித்தால் இது எந்த
விதத்திலும் ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான வன்முறை என்று கருதுவதே இல்லை என்பது
புரியும். சமுதாயம் இதை ஆண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் ஒரு குற்றமாகவே
பார்க்கின்றது.
பிறர் மனை சேர்க்கை:
பிரிவு
497 பிறருடைய மனைவியுடன் அவளுடைய
கணவன் அனுமதி இல்லாது அவளுடன் உடல் புணர்ச்சி செய்வது "பிறர்
மனை சேர்க்கை" என்ற குற்றமாகும்.
முக்கிய
அம்சங்கள்
1. கணவனுடைய அனுமதி இருக்கக்
கூடாது.
2. இதன் கீழ் குற்றம் செய்யும்
ஆண் மகன் மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாவான். பெண்ணை தண்டிக்க இயலாது.
3. பெண்ணின் கணவன் தான் புகார்
செய்ய வேண்டும். இதில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - கணவனுடைய அனுமதியோடு
ஒத்துழைப்போடு மனைவி பிற ஆணுடன் உடல் புணர்ச்சி கொண்டால் அதை என்ன செய்வது? இவ்வாறு தானே பல ஆண்கள்
திருமணம் என்ற பெயரில் "பெண்ணை" மணந்து கொண்டு விபச்சாரத்திற்கு
பயன்படுத்துகின்றனர். மனைவிக்கு வயதானவுடன், இளமை போனவுடன் அழகு
குறைந்தவுடன், இனிமேல் தொழிலுக்கு உதவாதவள்
என்று கருதும் பொழுது என் அனுமதியின்றி இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டிருக்கிறாள்
என்று கூறி அடித்துத் துரத்துகின்றனர். இதற்கெல்லாம் வழி வகுக்கின்றதே
இச்சட்டங்கள். பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் பெண்ணால்
அழிந்தன என்று வரலாறு கூறுகின்றது. அவை பெண்ணால் அழிந்தனவா? அல்லது பெண்கள் மீது ஆண்கள்
கொண்ட உடைமை உணர்வால் அழிந்தனவா? அதே உடைமை உணர்வு நமது
சட்டங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு
நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவினாலும் மக்களிடையே பலவிதமான விவாதங்களை
எழுப்பியுள்ளது.
தண்டனை
: ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
-
ஜி. எஸ். தைரியம்
இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள்
யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில்
சமூகத்தை வழி நடத்திய வர்கள் பெண்கள்தான். அந்த
பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.
கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப்
பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே
பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு
வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப்
பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது
மிகவும்
அவசியம்.
ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு
உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான
வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க
சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித
பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. பெண்களின்
நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான
வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.
15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான
வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும்
பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால்
பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.
பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள்
பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள்
ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும்
பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில்
ஆணாதிக்கத்தின் கீழ் அடிமை களாகவே உள்ளனர். அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.
நகர்புறங்களில்
பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும்
பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும்
கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின்
வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று
எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள்
பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடு
களையும் களைந்து, சமத்து
வத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு
21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து
நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ
பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய
நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.
1993-ல் வியான்னாவில் நடந்த "உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல்
மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. 1993-லிருந்து இந்திய அரசானது பல
நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டதுதான் "பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான
பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில்
எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு
பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி
பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.
இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு
பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல்
ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக்குத்
தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை
செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக
பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம்
"பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. "பெண்கள்
பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே
தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல
இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில்
பணி செய்வோர், மருத்துவமனைகளில்
நோயுற்றிருப்போர் முழுமையான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ்
ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம்
புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத்
தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து
நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. இச்சட்டத்தினை நடைமுறைக்கு
கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு
கருதி, அவர்களின் பணி இடங்களில்
தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள்
அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும்
எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின்
பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில்
எவ்வித சந்தேகமுமில்லை. சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப்
படுத்தப்பட்டால், கண்டிப்பாக
தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும்
முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு
அதிகரிக்கப்பட வேண்டும்.
கூத்திடத்தான் ஆசை ! ஆனால் நாட்டு நடப்புகள் மகளிரை -சிறுமியிலிருந்து மூதாட்டி- வரை வீட்டில் சிறை வைக்கும் அளவுக்கு அச்சத்தை தூண்டிவிட்டுள்ளது.
“பாதகர்முன் இந்நால் பரிசழிதல் காண்பீரோ?”
என திரௌபதி சபையில் நீதி கேட்டழுதுதல் போல் இன்றைய பெண்டிரும், நிலைகெட்ட மனிதரிடத்திலே அவதிப் படுகின்றனர் .அன்றைய திரௌபதிக்கும் ,சீதைக்கும் இன்றைய நிர்பயாவுக்கும்,அமில வீச்சில் இறந்த வித்யாவுக்கும் பெரும் வித்தியாசமில்லை . கிரண் பேடி போன்ற வீர பெண்கள் வாழும் இக்காலத்தில் பேடிகளும்,கேடிகளும் மலிந்து விட்டனர். இந்திய நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன . பெண்கள் தொடாத துறை இல்லை. ஆனால் பெண் விடுதலை என்பது இன்றும் போராடப் படவேண்டிய விசயமாகவே உள்ளது.
எல்லா பிரச்சனைகளுக்கும் சமூக ,பொருளாதார ,அரசியல் விளக்கங்கள் இருக்கின்றன .சமூக ரீதியாக பெண்ணை பலவீனமான உயிரினமாகவும்,போகப்பொருளாகவும் ,பொருளாதார வகையில் ஒரு சுமையாகவும் இன்று வரை சமுதாயம் கருதுகிறது .இந்நிலையை சீர்ப் படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன . பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ,சொத்துரிமை என சட்ட ரீதியாக பல உரிமைகள் தரப் பட்டுள்ளன.
ஆகவே இவற்றை தங்களது முன்னேற்றத்திற்கு ஏணியாகக்கொண்டு பெண்கள் முன்னேற்ற நிலையை அடைந்து வருகின்றனர்.எனவே அத்தகைய சட்டங்களைப் பார்ப்போம்
பெண் பொருளாதார மேம்பாடு பற்றிய சட்டங்கள் ,
பெண் சமூக மேம்பாடு பற்றிய சட்டங்கள் ,
பெண்களின் மருத்துவம் மற்றும் உடல் நலம் குறித்த சட்டங்கள் ,
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
என வகைப் படுத்தலாம்
அவற்றில் சில:
I பெண் பொருளாதார மேம்பாடு பற்றிய சட்டங்கள்
1.
வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961 -
வரதட்சணை கொடுப்போரையும் வாங்குபவரையும் தண்டிக்கும் சட்டம் . தண்டனை – 5 வருட சிறைத் தண்டனை.
15000
ரூபாய் அபராதம். இச்சட்டம் பெரும்பாலான மணமான பெண்களை வரதட்சணை சாவிலிருந்து காப்பற்றி வருகிறது. பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கும் (நிலை) மாறினால் அவர்களை ஒரு சுமையாக பெற்றோர் கருத மாட்டார்கள் .
2.
இந்திய வாரிசுகளுக்கும் சட்டம்,
1925 (1925 39)-
-மனைவியையும்,பெண் குழந்தைகளையும் வாரிசுகளாக்கிய சட்டம்
3.
குறைந்தபட்ச கூலி சட்டம் -
ஆண்களுக்கு சமமான (வேலைக்கான) ஊதியம் -தினசரி 5 மணி நேர வேலைக்கு ரூ 85 ஊதியம் .
4.
தொழிற்சாலைகள் சட்டம், 1948 -
தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உருவான இச்சட்டம் மகளிர் நலத்தையும் குறிப்பிடுகிறது . சம ஊதியம் சட்டம், 1976 -வேலைவாய்ப்பு விஷயத்தில் பெண்களுக்கு எதிரான, பாலியல் அடிப்படையில் பாகுபாடுஇல்லாது ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கும் நோக்கம் கொண்டது.
II.
பெண் சமூக மேம்பாடு பற்றிய சட்டங்கள்
1. சதி (தடுப்பு)
சட்டம், 1987 -
இந்துமத சடங்கான சதி என்னும் விதவைகளை இறந்த கணவனின் உடலோடு எரித்தல் ,சதிகளுக்கு கோவில் கட்டி வணங்குதல் போன்ற மூட பழக்கங்களை அறவே அழிக்க உதவும் இச்சட்டம் ,இதை மீறுவோருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப் படும்.
பெண்களை அநாகரிகமாக காட்டுவதை தடை செய்யும் சட்டம், 1986- மகளிரை வர்த்தக விளம்பரங்களிலும் ,ஊடகங்களிலும் மரியாதை குறைவாக சித்தரிக்கும் முறையை தடை செய்ய வேண்டி இச்சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
மீறினால் முதல் குற்றத்திற்கு அதிக பட்சமாக 2 ஆண்டு சிறையும்,2000 ரூபாய் அபராதம் ,இரண்டாவது குற்றத்திற்கு அதிக பட்சமாக 5
ஆண்டுசிறையும்,10,000 ரூபாய் அபராதம் வழங்கப் படும் .
குழந்தை திருமண கட்டுப்பாடு சட்டம், 1929
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மணம் செய்தல் கூடாது .
இந்து மதம் தத்து எடுத்தல் & பராமரிப்பு சட்டம், 1956 - ஒரு இந்து மதத்தை சார்ந்த மனைவியையும் ,குழந்தையையும் தன்வாழ்நாள்
காலம் முழுவதும் அவரது கணவரால் பராமரிக்கப் படும் உரிமையை இந்த சட்டம் தருகிறது .
III.
மருத்துவம் மற்றும் பெண்களின் உடல் நலம் குறித்த சட்டங்கள்
2011
ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் பெண் விகிதாசாரம் 1000:940 ஆக உள்ளது.
பெண்களுக்கு எல்லா உரிமைகளை அரசாங்கம் தந்திருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் பிறக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கபடுவது கவலைக்குரியதுதான்.பெண் சிசுக் கொலையை தடுக்கப் பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
அவற்றுள் ஒன்று
குழந்தைபிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் (ஒழுங்குமுறை மற்றும் தடுப்பு) சட்டம், 1994 -மரபணு அல்லது வளர்சிதைமாற்ற குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட பிறவிகுறைபாடுஅல்லது பாலியல் தொடர்புகோளாறுகள்கண்டறிவதற்கான நோக்கத்திற்காக குழந்தைபிறப்புக்கு முன் கண்டறியும் நுட்பங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும்இது போன்றதொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இச்சட்டம் உதவும் .இதைக்கொண்டு பிறக்கும் சிசுவின் பாலியலைகண்டு பிடித்து பெண் சிசுவைக் கர்ப்பத்திலேயே களைக்கும் கொடுமையை தடுப்பதே நோக்கம்.
மீறினால் அதிக பட்சமாக 3 ஆண்டு சிறையும்,100000 ரூபாய் அபராதமும் வழங்கப் படும் -
மருத்துவ முறையில் கர்ப்பத்தை அழிக்க வகை செய்யும் சட்டம் 1971/2002 - 12 முதல் 24 வார பெண்ணின் கர்ப்பத்தைபிறவிக் குறைபாடு
போன்ற மருத்துவக் காரணங்களுக்காக அழிக்கலாம் என்ற விதியை மீறி பெண் சிசு வதை செய்ய இந்த முறையை துஷ்ப்ரயோகம்
செய்வோரை தடுக்க இச்சட்டம் உதவும்.அதே போல் கர்ப்பிணி பெண்களின் உயிரை மருத்துவ காரணங்களுக்காக காக்கவும்
வழி வகுக்கிறது .இதன் வாயிலாக கருக்கலைப்பு செய்யும் உரிமை சட்ட ரீதியாக பெண்களுக்குத் தரப் படுகிறது.
தேசிய மகளிர் ஆணையம் சட்டம் 1990 த்தின் படி ஒரு அமைப்பு நிறுவப்பட்டு பெண்டிருக்கான சமூகப்பிரச்சனைகளை களையப் பாடுபடும்.
அனைத்து வகை பெண் சம்பந்தமான குற்றங்களை விசாரிக்கவும்,நீதி அளிக்கவும் , நஷ்ட ஈடு தரவும் இதற்கு அதிகாரம் இருக்கிறது
IV.
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
பரத்தமை தடுப்பு சட்டம் 1986/2006- பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாகவன்கொடுமைக்கு ஆளக்குவதை தடுக்க வந்த சட்டம் இதுவாகும்.இந்த குற்றத்திற்கான தண்டனை மூன்று மாத சிறை,30000
ரூபாய் அபராதம்.
குழந்தைகளை கடத்தி பாலியல் வியாபார நோக்கத்தோடு விற்கும் குற்றவாளிகளுக்கு 7 வருட கடுங் காவல் சிறைத் தண்டனை கொடுக்கப் படும்.
பெண்களை கேலி செய்தலை தடுக்கும் சட்டம் : பெண்களின் உணர்வுகளை மதிக்காது தகாத வார்த்தைகளால் திட்டுதல் , தேவையில்லாத ஆபாச சைகைகள் செய்தல், கண்ணியமற்ற உடல் மொழி போன்ற குற்றங்களுக்கு இந்திய பீனல் சட்டத்தின் மூலமாகவும் முதல் குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் .2000 அபராதமும் ,அடிக்கடி செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் .5000 அபராதமும் தண்டனையாகும் .
வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் 2005 சட்டம்-
பெண்களை வழக்கமாக தாக்குதல் அல்லது கொடுமை செய்தல் அல்லது முறையற்ற வாழ்வு நடத்த வற்புறுத்துதல் ,காயப் படுத்துதல் போன்ற குற்றங்களை தடை செய்ய இச்சட்டம் உதவுகிறது .தண்டனை- ஒரு வருட சிறை ,10000 ரூபாய் அபராதம்
வேலைக்கு போகும் மகளிர்க்கு பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் ஒன்று புதிதாக, கடந்த மாதம் இயற்ற பட்டுள்ளது .பணிக்குச் செல்லும் .பெண்கள், பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்க்கும்) சட்டத்தின்படி
பெரிய கர்போரட் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் ஆக இருந்தாலும் சரி, அரசு அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் ஆக இருப் பினும் சரி,வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ஆக இருந்தாலும் சரி, பெண்விவசாய கூலித் தொழி லாளர் ஆக இருந்தாலும் சரி, பாதுகாப்புப் பெறுவர்.
இதன் படி குறைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப் பட்டு , 90 நாட்களுக்குள் அதன் தீர்ப்புப் படி தக்க தண்டனை தரப் படும்.
கற்பழிப்பு எதிர்ப்புச் சட்டம் 2013 - இதன் படி பெண்களை மானபங்கம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையும்,வாழ்நாள் முழுதும் கடுங்காவல் தண்டனையும் அளிக்கப் படும்.அமில வீச்சு ,பெண்டிரை தொடர்ந்து போய் தொந்திரவு செய்தல்,போன்ற பல பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இச்சட்டத்தின் மூலம் தண்டனை தரப் படும்.
இத்தனை சட்டங்கள் பின்னர் ஏன் அத்தனை வன்முறைகள் ?
பெண்களுக்கான எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப் படுத்தலில் சிக்கல்கள் உள்ளன.
இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் தொடங்கி, எல்லாவித சமத்துவமும் பெண்டிருக்கு அளிக்க பட்டுள்ளது.
எண்ணற்ற சட்டங்களும் ,ஆணையங்களும் இருந்தாலும் ஆணாதிக்க மனப்பான்மை, சமுதாயத்தில்
மாறாதவரை மகளிருக்கான பாதுகாப்பு ,மேம்பாடு எல்லாம் கானல் நீர்தான்.
வீட்டிலே பூட்டி கிடந்த பெண்களை தோளோடு தோள் கொடுத்து, பொது வெளியில் சமானமாக பங்கேற்பதை ஏற்கும் மனப் பக்குவத்தை
நம் சமூகம் இன்னும் அடையவில்லை.
”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்
என்று வாழும் புதுமைப் பெண்களைத் தவறாக புரிந்து கொண்டு,
போட்டியாக பாவித்து இதுவரை அடக்கி ஆண்ட சமூகம் சமமாக நடத்த தெரியாமல் தவிக்கிறது.
சங்க காலத்திலேயே ஔவையார் பெண்களின் பாதுகாப்பை பற்றி கீழ்கண்டவாறு பாடியிருக்கிறார்.
“
நிலம் காடாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம் மேடாக இருக்கலாம். ஆண்கள் எங்கே நல்லவர்களாகஇருக்கிறார்களோ அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும் நல்லவளாக இருக்க முடியும்.” :
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (187 :
3- 4)
ஆண்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை இன்றைக்கும் பொருந்தும் .
மேலும், பெண்கள் நிலை மேம்பட, பள்ளி ,கல்லூரிகளில் பெண்களை மதிக்கக் கற்றுத்தரப் பட வேண்டும்.குடும்பங்களுக்குள் மகளிரைசரி சமமாக நடத்த வேண்டும்.அலுவலகங்களிலும் ,பொது இடங்களிலும் மரியாதையாக பெண்களை நடத்த வேண்டும் .
அதற்கு ஊடகங்களில் பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கப் படுவது அறவே நிறுத்தப் பட வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் ,அரசாங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் வரம்பு மீறல்களை கண்காணிப்பு செய்ய வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்புக் கலைகளில் பயிற்சி தரப் பட வேண்டும்.
பெண்கள் தங்களுடைய கல்வித் திறனை உயர்த்தி ” எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்று தனது
உரிமைகளை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஆடவர், பெண்களை சக மனுஷிகள் என்பதை நெஞ்சில் நிறுத்தி கௌரவமாக நடத்த வேண்டும்
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்”
அப்போதுதான் மானுடம் வெல்லும்.
-
உமா கிருஷ்ண குமார்
பெண்களும் குடும்ப வன்முறைகளும்
[மாற்றம் செய்த நேரம்:2/7/2014 4:12:55 PM]
-Shruti
Haasan joins Puli sets
உலக
பாரத்தை தாங்கும் பூமாதேவி போல தன்னுடைய துன்பங்கள் அனைத்தையும் பொறுமையாக
தாங்கிப் போராடுபவளே ஒரு பெண். ஆனால், அவள் பொறுமைக்கும் ஒரு
எல்லை உண்டு. எந்த ஒரு பெண்ணும் தன் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும்
கொடுமைகளுக்கும் சட்டத்தின்
உதவியை
நாடுவது என்பது அவள் எடுக்கும் கடைசி ஆயுதமே. பெரும்பாலும் குடும்ப வன்முறையால்
பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளியே சொல்வதே அரிது. தன்னால் இயலாத நிலையில் சட்டத்தின்
உதவியை நாடினாலும் ஒரு சமரச முயற்சியையே அவர்கள் மேற்கொள்வார்கள். அந்த சமரச முயற்சி பயனளிக்காத
நிலையில் சட்டம் தன் பணியை தொடரும்.
1. குடும்ப வன்முறையால்
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிர் தரப்பி- னருடன்
சமரசம் பயனளிக்காத பட்சத்தில் பாதுகாப்பு அலுவலரின் உதவியுடனோ, வழக்கறிஞர் ஒருவர்
மூலமாகவோ,
அந்தப்
பெண் வசிக்கும் இருப்பிடத்துக்கு உட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்
மனு
தாக்கல்
செய்யலாம். அந்த மனுவில் அந்தப் பெண்ணுக்கு யாரால் எந்தவிதமான பாதிப்பு
ஏற்பட்டுள்ளது,
அதற்கு
அவர் கோரும் தீர்வு என்ன
ஆகியவற்றை
அதற்குரிய படிவத்திலோ, படிவ வடிவத்திலோ தெளிவாகக் குறிப்பிட்டு
நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படவேண்டும்.
2. அந்த மனுவை நீதிபதி அவர்கள்
வழக்கு பதிவு செய்த 3 நாட்களுக்குள் தன் பார்வைக்கு எடுத்து
எதிர் தரப்பினருக்கு நீதிமன்ற அழைப்பு (Summon) அனுப்ப
உத்தரவிடவேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் நீதிமன்ற அழைப்பு 2 நாட்களுக் குள்ளாகவோ, எதிர் தரப்பினரை அடைய
வேண்டிய போதிய
அவகாசத்துக் குள்ளாகவோ அனுப்பப்பட வேண்டும். ஒரு வேளை இந்த மனு
பாதுகாப்பு அலுவலரின் உதவியுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவரே இந்த நீதிமன்ற அழைப்பு
அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். இந்த சட்டத்தின் கீழ்
எந்தவித கால தாமதமும்
அறவே
தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் எதிர் தரப்பினருக்கு நீதிமன்ற அழைப்பு
கிடைத்து 60
நாட்களுக்குள்
நீதிமன்றம் ஒரு
தீர்வுக்கு
வரவேண்டும்
என்பது சட்டம் நிர்ணயித்துள்ள கால அவகாசம்.
நீதிமன்ற
சம்மன் கிடைக்கப் பெற்றவுடன் நீதிமன்றத்தில் எதிர்தரப்பினர் நேரில் ஆஜரானவுடன்
நீதிமன்றத்தின் மூலமே நல்ல ஆலோசகரின் உதவியுடன் ஆலோசனை மற்றும் சமரச முயற்சி
மேற்கொள்ளப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் எல்லா வழக்குகளையும் போல திறந்த
நீதிமன்றத்தில்
அனைவரின்
பார்வைக்கு முன்னரும் வழக்கு நடைபெறாமல்
[வீஸீநீணீனீமீக்ஷீணீ
ஜீக்ஷீஷீநீமீமீபீவீஸீரீs] என்று சொல்லப்படுகின்ற நீதிபதியுடன் வாதி, பிரதிவாதி மற்றும் இரு
தரப்பினரின் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி தங்களுடைய வாதங்களை எடுத்துரைக்க ஏதுவாக
அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால்
பாதிக்கப்பட்ட பெண் எந்தவித கூச்சமோ, அச்சமோ இல்லாமல் தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க
முடியும்.
இந்தச்
சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் எந்தவிதமான பாதுகாப்புகளை கோரலாம்?
பாதுகாப்புக்
கட்டளை (protective
order):
பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு வீட்டில் உடன் வசிக்கும் ஆண் நபர் செய்யும் எந்தவகையான குடும்ப
வன்முறையிலிருந்தும்,
அவ்வாறு
குடும்ப
வன்முறை
செய்ய அவருக்கு உடந்தையாக இருப்பவரிடமிருந்தும் தகுந்த பாதுகாப்பு கோர இந்தச்
சட்டம் வழிவகை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பணியாற்றும் இடத்தில்
நுழைந்து அவருக்கு தொந்தரவு செய்தல் மற்றும் பாதிக்கப்படும் பெண் 18 வயதுக்குட்பட்டவராக
இருக்கும் பட்சத்தில் அவர்
படிக்கும்
பள்ளிக்கோ,
கல்லூரிக்கோ
சென்று தொந்தரவு செய்தல் அல்லது அவ்வாறு அந்தப் பெண்ணை தனிப்பட்ட முறையிலோ, வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, தொலைபேசி அல்லது
மின்னஞ்சல் மூலமாகவோ தொந்தரவு செய்தல் அல்லது தொடர்பு கொள்ள முயற்சித்தல், மேலும் இருவருக்கும் சொந்தமான
வங்கிக் கணக்கையோ,
வங்கிப்
பெட்டகத்தையோ,
சீதனச்
சொத்தையோ,
தனிச்
சொத்தையோ பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் கையாளுதல்
மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் உற்றார், உறவினருக்கு அல்லது வேறு நபருக்கு வன்செயல் செய்தல்
ஆகியவற்றிலிருந்து தக்க பாதுகாப்பு கோரி பாதுகாப்பு உத்தரவு பெற இந்தச் சட்டத்தின்
18வது பிரிவின் கீழ்
தீர்வு கோர வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
வசிப்பதற்கான
கட்டளை (Residence
Order):
பாதிக்கப்பட்ட
பெண் வசிக்கும் வீடு எதிர் மனுதாரருக்கு சட்டப்படி உரிமையானதாக இருந்தாலும்
இல்லையென்றாலும்,
அந்த
வீட்டை விற்பனை
செய்யவோ, வேறு ஏதாவது ஒரு வகையில்
இடையூறு செய்ய நினைப்பதையோ தடுத்து நிறுத்தக் கோரியோ, பாதிக்கப்பட்ட பெண் அவள்
வசிக்கும்
வீட்டிலிருந்தே
தொந்தரவு செய்யும் எதிர் மனுதாரரை வெளியேற்றக் கோரியோ, பாதிக்கப்பட்ட பெண்
வீட்டில் எந்தப் பகுதியில் வசிக்கிறாரோ அதில் எதிர் மனுதாரரோ, அவரின் உறவினரோ நுழைவதற்கு தடை கோருதல், பாதிக்கப்பட்ட பெண்
வசிக்கும் வீட்டை எந்தவிதமான உரிமை மாற்றம் செய்ய எதிர் மனுதாரருக்கு தடை
விதிக்கவும்,
பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு அந்த வீட்டிலிருக்கும் உரிமையை எதிர்மனுதாரர் நீதிமன்ற உத்தரவில்லாமல் துறப்பதற்கு
வலியுறுத்தல்,
பாதிக்கப்பட்ட
பெண் அனுபவித்து வந்த அதே வசதியுடன் கூடிய வேறோரு வீட்டில் அந்தப் பெண்
வசிப்பதற்கான ஏற்பாடு
செய்து
அதற்குரிய வாடகையையும் செலுத்தல் வேண்டியும் தீர்வு கோர இந்தச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
பண
உதவிகள் (Monetary
Reliefs)
குடும்ப
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் செலவை ஈடுகட்டச்
செய்வதற்கும்,
பண
இழப்புக்கு பண உதவி
செய்திடவும்
கட்டளை கோருதல்... பொதுவாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண் அவளுடைய
சம்பாத்தியத்துக்கு ஏற்பட்ட இழப்பு, மருத்துவச் செலவுகள், பாதிக்கப்பட்ட பெண்ணின்
பொருளை சேதப்படுத்துதல்,
அதனால்
ஏற்படும் இழப்பை ஈடுகட்டுதல் போன்ற விஷயங்களுக்காக பொருளாதார ரீதியாக
இந்தச் சட்டத்தின் கீழ் தீர்வு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடைமுறைச்
சட்டம் பிரிவு 125ன் கீழோ, வேறு சட்டத்தின் கீழ்
போதிய ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்திருந்தாலும், குடும்ப வன்முறை
சட்டத்தின் கீழ் ஜீவனாம்ச மனு தாக்கல் செய்ய சட்டம் எந்தவிதமான தடையும்
விதிக்கவில்லை.இவ்வாறு பண உதவி கொடுக்க வழங்கப்படும் உத்தரவு மாதந்தோறும் அல்லது
மொத்தமாக
ஒரே
தொகையாக உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு செலுத்தத் தவறும்
பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் அதை செலுத்திட செய்யவும் கட்டளையிட
அதிகாரம் உண்டு.
மேற்கூறிய
பண உதவிக் காண தீர்வு கோர இந்தச் சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
ஒப்படைத்தல்
கட்டளை (Custodial
order):
பாதிக்கப்பட்ட
பெண் எதிர் தரப்பினர் வசம் இருக்கும் தன்னுடைய குழந்தையை தன் வசம் ஒப்படைக்க கோரி
மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் குழந்தையின் நலன் கருதி குழந்தையை அப்பெண்ணிடம்
ஒப்படைக்க இந்தச் சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இழப்பீடு
கட்டளைகள் (Compensation
order):
குடும்ப
வன்முறையால் மனஉளைச்சலில் பாதிக்கப்பட்ட பெண் எதிர் தரப்பினரிடமிருந்து போதுமான
இழப்பீடு கோர இந்தச் சட்டத்தின் பிரிவு 22ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் சம்மன்
கிடைக்கப்பெற்றும் நீதிமன்றம் அளித்த கால அவகாசத்துக்கு உட்பட்டு எதிர் தரப்பினர் நீதிமன்றத்தில்
ஆஜராகாமல் இருப்பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்டு ஒருதலைப்பட்சமாக
தீர்ப்பு அளிக்க இந்தச் சட்டத்தில் எந்தவிதமான தடையும்
இல்லை.
இந்தச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு அந்த உத்தரவு
நகலை எந்த வித நீதிமன்ற
கட்டணமும்
செலுத்தாமல் இலவசமாக பெற சட்டம் வழிவகை செய்துள்ளது.
குடும்ப
வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தான் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வசிக்கும்
அல்லது பணி செய்யும் இடத்தில், எதிர் தரப்பினர் வசிக்கும்
அல்லது பணி செய்யும் இடத்தில், எந்த இடத்தில் இந்த பெண்
குடும்ப வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டாலோ, இதில் ஏதாவது ஒரு இடத்தின் அருகாமையில்
உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இந்த நீதிமன்றம்
கொடுக்கும் தீர்ப்பின் மீது
மேல்முறையீடு
செய்ய செசன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் பிறப்பிக்கும் கட்டளைகளை நிறைவேற்றாமல்
இருக்கும் எதிராளிக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் மேலும் ரூபாய் 20 ஆயிரம் அபராதத்துடன்
கூடிய சிறைத் தண்டனையும் கொடுக்க இந்தச் சட்டத்தில் வழி உண்டு.
மேற்கூறிய
இந்த தண்டனை நீதிமன்ற கட்டளையினை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்காகவே
கொடுக்கப்படுகிறது.இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அலுவலர்கள்
அவர்களுக்கு நீதிமன்றம் இட்ட பணியினை செவ்வனே செய்தல் அவசியம் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
அவ்வாறு அல்லாமல் பாதுகாப்பு அலுவலர் பணியில் தவறு இருப்பின் அவரும் தண்டிக்கப்பட
இந்தச் சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தினை
பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது அரசாங்கத்தின் தலையாய
கடமையாகும்.
காலங்காலமாக
நம் நாட்டை தாய் நாடு என்றும், மொழியை தாய் மொழி என்றும், நம் நாட்டில் பாயும்
நதிகளை பெண்ணுக்கு இணையாக பெண்ணின் பெயர் சூட்டியே அழைப்பதும், பெண்களை தெய்வமாகப்
போற்றுவதும் பெயரளவில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உண்மையில்
நம்முடைய அரசியல் சாசனம் சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறினாலும்
நம் சமுதாயத்தில் ஆணாதிக்க சிந்தனை ஒரு பெண்ணை, அவள் வளர்ச்சியை, அவளடையும் சாதனைகளை ஆணுக்கு சமமாக சமநோக்கில்
ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு நாகரிக சமுதாயத்தின் மேம்பட்ட வளர்ச்சி அந்த சமுதாயத்தில் பெண்களுக்கு
அளிக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். பெயரளவில்
மட்டுமல்லாமல்
உண்மையாக
மனதளவில் என்றைக்கு ஆணையும் பெண்ணையும் சமமாக பார்க்கிறோமோ அன்றுதான் நாம்
உண்மையான நாகரிக சமுதாயத்தில் வாழ ஆரம்பிக்கிற முதல் நாள்!
-
Adv.
Pankiras A
(District Courts, Thiruvananthapuram)
Tuesday, 13th Jan
2015
For the TSSS Women at
Thoothoor Forane