Tuesday, 16 February 2010

வெட்டுகாடு

பதினாலாம் நூற்றாண்டிலிருந்தே கிறிஸ்தவர்கள் இந்த கடலோர கிராமத்தில் இருந்தாலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதாம் ஆண்டு மட்டுமே ஒரு குரு இந்த அழகு கிராமத்திலிருந்து திருநிலை படுத்தபட்டார். அந்த தவப்புதல்வன்தான் அருள்தந்தை சி. எம். ஹில்லாரி அவர்கள். இவரது தந்தை திரு. கார்மல் மிராண்டா இந்த அரும்பெரிய இறை அருளுக்கு நன்றிக்கடனாக கிறிஸ்து அரசர் திரு உருவம் ஒன்றை பொது வணக்கத்திற்கு கொடுப்பதாக உறுதி எடுத்துக்கொண்டார். அதன்படி தமக்கு கிடைத்த ஒரு படத்தை சிலை செய்வதில் நிபுணர்களான சம்பக்குளத்து சிர்ப்பிகளுக்கு கொடுத்து இன்று காணும் அழகு சிலையை செய்து வாங்கினார். சாலை வசதிகள் இல்லாது அன்று அச்சிலையை ஓடம் வழியாக வேளிக்கும், பின் அங்கிருந்து நமது திருத்தலத்துக்கும் கொண்டுவந்தார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு அன்றைய கொச்சி ஆயர் ஜோஸ் வியேரா அல்வர்னாஸ் அவர்களால் இன்றைய அதே இடத்திலேயே பிரதிஸ்டிக்கப்பட்டது. அவரே நேரில் ஆண்டவரின் புதுமைகளை தரிசித்து, அனுபவித்து பரவசப்பட்டிருக்கிறார்!
ஆண்டவரின் காலத்து மக்களும் அவரது புதுமைகளை அனுபவித்ததை நற்செய்திகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. மத்தேயு பதினைந்தாம் அதிகாராத்தில் கூறுவது: மலைமேல் ஏறி அமர்ந்த அவரிடம் மக்கள் திரளாக வந்தனர். அவர்களுள் ஊமை, குருடர், மற்றும் ஊனமுற்ற அனைவரையும் அவர் கருணையுடன் குணப்படுத்தினார் என்று. மாற்குவும் தமது ஐந்தாம் அதிகாரத்தில் மருத்துவர் பலரிடம் தனது உடைமைகள் அனைத்தையும் செலவிட்டும், அல்லல் பல பட்டும் குணமாகாத பெரும்பாட்டை அவரது அங்கியின் விளிம்பில் தொட்டபோதே குணமான பெண் ஒருத்தியை காட்டுகின்றார். இந்நிகழ்வுகள்தாம் இன்றைய நோயாளிகளையும், வேதனைப்படும் அனைவரையும் அவர் அண்டையில் கொணர்கின்றது. அவர்களும் நோய் நீங்க ஆறுதல் அடைந்து பூரிப்புடன் வீடு திரும்புவதை இன்றும் வேட்டுகாட்டில் நாம் தரிசிக்கின்றோம்.
'சுமை சுமந்து சோர்ந்திருபபோரே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றி அளிப்பேன்' எனக்கூறியது இன்றும் இத்திருத்தலத்தில் உண்மையாகின்றது. அவரது திரு உருவம் நிறுவப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை எண்ணற்ற பக்தர்கள் அவர் அருள் பெற்று அசீர் பெற்று வளம் பெறறுள்ளனர், வாழ்வு பெற்றுள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் பக்தர்கள் தங்கள் சுமைகளை சுமந்திங்கு வருகின்றனர், சுமை நீங்கி நிம்மதியுடன் திரும்புகின்றனர், நன்றிப்பெருக்குடன் மீண்டும் வருகின்றனர், பிறரையும் கொணர்கின்றனர். அங்ஙனம் அவருக்கு, அவரது அன்புக்கு, கருணைக்கு சட்சியாகின்ற்றனர். அவரது வற்றாத அன்பும் கருணையும் இன்றும் நம்மை அழைக்கின்றது. வருக, அவர் அருள் பெறுக, வளம் பெறுக, வாழ்வடைக, நிறை வாழ்வடைக!
- அருட்பணி கிலாடின் அலக்ஸ், பங்கு தந்தை.

வெட்டுகாடு

திருச்சபை வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு கிறிஸ்து அரசரின் பெருவிழாவாக கொண்டாடுகிறது. இவ்வழக்கத்தை பதினொன்றாம் பத்திநாதர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இருபத்தி ஐந்தாம் ஆண்டு தமது 'குவாஸ் ப்ரீமஸ்' எனும் திருவெழுத்து வழியாக தொடக்கி வைத்தார். அன்றிலிருந்து இவ்விழா மிகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எழில்கொஞ்சும் அரபிக்கடற்க்கரையில் அமைந்திருக்கும் இவவழகு ஆலயம் மேலும் அழகானது கிறிஸ்து அரசரின் அழகு உருவ சிலை இங்கே அமைந்தபோதுதான். அதற்கும் உண்டு ஒரு சரித்திரம்.

கிறிஸ்து ராஜ திருத்தலம், வெட்டுகாடு, திருவனந்தபுரம்

அரசருக்கெல்லாம் அரசரான இயேசு கிறிஸ்துவின் தெய்வீக அருள் நிறைந்த திருத்தலமே மாத்ரே-தே-தேவூஸ், வெட்டுகாடு. கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தின் மேற்க்கே அரபிக்கடல் தாலாட்ட எழில்கொஞ்ச தவழும் இந்த பங்கு பார்போற்றும் திருத்தலம் என்று கூறுவது மிகையாகாது.
சாதி-மத வேற்றுமை இன்றி மக்கள் தங்கள் வேதனை, சோதனைகளை கிறிஸ்து அரசரின் திருப்பாதத்தில் இறக்கி வைத்து இளைப்பாறுகின்றனர், ஆறுதல் அடைகின்றனர். தீரநோயால் வாடுவோர், பிள்ளைப்பேறின்றி தவிப்போர், வேலையின்றி திண்டாடுவோர், குடும்பத்தில் சமாதானம் இழந்தோர், இன்னபிற மக்கள் அவரை அண்டி வந்து அருள் பெற்று செல்கின்றனர்.
தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அவர் சந்நிதியில் நோன்பிருந்து ஜெபித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது இவரது பக்தர்களின் ஆழமான, அசையா நம்பிக்கை.
வெட்டுகாடு, ஒரு சரித்திர கண்ணோட்டம்:
ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தி நாலாம் ஆண்டு நமது தாய் திருநாட்டின் இரண்டாவது அப்போஸ்தலர் என போற்றப்படும் பிரான்சிஸ்கு சவேரியார் திருவிதாங்கூர் நாட்டிற்கு வருமுன்னமே வேட்டுகாட்டில் ஒரு கிறிஸ்தவ சமூகம் இருந்திருக்கிறது. அவர்கள் ஜெபிக்கவும், வேதம் பயிலவும் புனித அன்னாள் ஜெபக்கூடம் என்ற ஓன்று இருந்ததாகவும் அது தற்போதைய கன்னியர் மடம் இருக்கும் இடத்தில் இருந்ததாகவும் தெரிகின்றது.
நமது தாய் நாடு போன்ற நாடுகளுக்கு மாலுமிகளை வியாபார நோக்குடன் அனுப்பிய போர்த்துக்கீசிய மன்னன், அவர்கள் செல்லும் இடமெல்லாம் கற் சிலுவைகள், ஜெபக்கூடங்கள் நிறுவ கேட்டுக்கொண்டான். அங்ஙனம் அவனது ஆறாவது இந்திய பிரதிநிதி கப்ரான் நிறுவிய கற்சிலுவை வெட்டுகாட்டில் இருந்தாகவும் தெரிகிறது. இதுவே இப்பகுதிகளில் மறை பரப்பிய பிரான்சிஸ்கன் துறவியர்களும் கண்டதாகவும் தகவல்கள் உண்டு. இதே தகவல்களையே சவேரியார் இயேசு சபை ஸ்தாபகரான புனித இன்னாசியாருக்கும் தெரியப்படுத்தியதாகவும், அந்த தகவல் இன்றும் உரோமையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நாள் போக போக, நற்செய்தி விதைகள் வளர்ந்து நூறு மடங்கு அறுவடையாக அப்போதைய ஜெபக்கூடம் போதாமல் வர புதிதாக ஒரு தேவாலயம், ஏறக்குறைய தற்போதைய இடத்திலேயே கடல் நோக்கி கட்டப்பட்டது. தற்போதைய இந்த பெயரும் சவேரியாரே கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். அப்போதெல்லாம் கோவாவை சார்ந்த குருக்களே பங்கு தந்தையர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்று நாம் காணும் கோயில் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஏழாம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் பணி தந்தை மோந்தேரோ அவர்கள் ஆயிரத்து எண்ணூற்றி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் தொடக்கி வைத்தார்.
ஆலய பெயர்: "மாத்ரே" என்ற போர்த்துக்கீசிய வார்த்தைக்கு 'தாய்' என்றும், "தே தேவூஸ்" எனும் இலத்தீன் வார்த்தைக்கு 'இறைவனின்' என்ற பொருளுண்டு. ஆக இந்த இரண்டு இருமொழி வார்த்தைகளுக்கும் 'இறைவனின் தாய்' எனும் பொருளுண்டு. இதுவே சவேரியார் அளித்த பெயர் என்றும் கூறுகிறார்கள்.
கிறிஸ்து அரசரின் சிறப்பு திருத்தலம், வெட்டுகாடு: